
பிரஷர் பார்க்கச் சென்ற பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி
களுத்துறை – நாகொடை வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மத்துகம – பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தம் (Blood Pressure) பரிசோதித்த போது, அவர் அந்த பெண் வைத்தியருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளதாகப் புகார் கிடைத்துள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பொலிஸில் புகார் அளிக்கப் போவதாக வைத்தியர் எச்சரித்த போதிலும், மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கச் சென்ற போது இரண்டாவது முறையாகவும் அவர் அத்துமீறி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் அதே வைத்தியசாலையிலேயே அவருக்குச் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹகம, சமகிபுர, தென்னஹேன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார் .
களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகரவின் ஆலோசனையின் கீழ், உப பொலிஸ் பரிசோதகர் வன்னியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

