
2026-ம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகள் -சீன அரசாங்கத்தின் நன்கொடை முழுமையாகக் கையளிப்பு
2026-ம் கல்வி ஆண்டிற்காக இலங்கை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் பயிலும் மாணவர் பிக்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான முழுமையான சீருடைத் துணிகள் சீனக் குடியரசினால் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆவணப் பரிமாற்ற நிகழ்வு இன்று (22) கல்வி அமைச்சின் வளாகமான இசுருபாயவில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகள், 4.4 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது .
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong) ஆகியோர் உட்பட மற்றும் பலரின் பங்கேற்புடன் நிகழ்வு
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய,
“பாடசாலை சீருடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது கௌரவம் மற்றும் சமத்துவத்தின் அடையாளம். சீனக் குடியரசின் இந்த நன்கொடை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் மைல்கல்லாகும். இது மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, அவர்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்க உதவும்.” எனத் தெரிவித்தார்.
சீனத் தூதுவர் கி சென்ஹொங்,
“கடந்த 4 ஆண்டுகளாக இந்த சீருடை வழங்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது தவிர, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் புலமைப்பரிசில்கள் மூலமாக இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்த சீனா என்றும் துணை நிற்கும்.” எனத் தெரிவித்தார்.
சீருடைத் துணிகள் விநியோகிக்கப்பட்டதன் மூலம், போக்குவரத்து மற்றும் ஏனைய நிர்வாகப் பணிகள் எவ்வித தாமதமுமின்றி நிறைவடைந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

