
3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு
“எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தில் வீதியோரங்களில் உள்ள மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை நாளை (24) முதல் 26 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறிப்பாக கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரை உள்ள பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த முடிவு, நேற்று (22) கேகாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இக்கூட்டம் சுற்றுச்சூழல் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெற்றது.
அமைதி நடைப்பயணத்தின் போது ஒழுங்கையும் மரியாதையையும் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

