
12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஹோமாகம ககனவின் உதவியாளர் கைது
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவினரால் நேற்று (24) ஹோமாகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்,பிரசாத் நிஷாந்த கொலம்பகே எனும் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வெளிநாட்டில் ஒளிந்துள்ள பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘ஹோமாகம ககன’ என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டவர் இந்த சந்தேக நபரென என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘ரஞ்சித் பெரேரா’ அல்லது ‘கொண்ட ரஞ்சித்’ எனும் பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய இந்த வலையமைப்பிலிருந்து இதுவரை சுமார் 37 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘கொண்ட ரஞ்சி’யின் பிரதான உதவியாளர் ஒருவரும் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொகுதியுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

