
ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவசரமாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டவுடன், பலத்த ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி ட்ரம்பை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு உலோகக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகளை தாண்டி உள்ளே நுழைய முயன்றதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

