
22 துறவிகளை போதைப்பொருள் கடத்த வழிநடத்திய பிரதான பிக்குவை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 துறவிகளை வழிநடத்திய பிரதான சந்தேக நபரான
கடவத்தை ரம்முதுகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணகொலே அமிதானந்த பிக்குவை, மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று 27 நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த பிக்கு சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி இம்முறை பிணை கோரவில்லை எனவும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பிணை கோர எதிர்பார்பதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபரான அகுணகொலே அமிதானந்த பிக்குவிடம் ஏதேனும் சொல்ல விரும்புகின்றீர்களா என நீதிபதி வினவிய போது அறியாமையினால் இந்த தவறை தான் செய்தாதாக தெரிவித்தார்.
குறித்த பிக்குவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது உடலில் போதை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் குறித்த பிக்குவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை பரிசீலனை செய்து அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
குறித்த பிக்கு தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகுதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்கத் தயாராக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
22 துறவிகள் போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் பிடிபட்டதையடுத்து, இந்த பிரதான பிக்கு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த நிலையில், நேற்று (26) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ அறிக்கைகளின்படி, கைது செய்யப்பட்ட நேரத்தில் இந்த பிக்கு போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனைய துறவிகளை தாய்லாந்துக்கு அனுப்பியதும், அவர்களை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்ட Whatsapp கணக்கை இயக்கியதும் இவரே என்பது நீதிமன்றில் அம்பலமானது.
சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஸீஷ் வகை போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைத்து இவர்கள் நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

