
ஏஹி பஸ்சிகோ சர்வதேச அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று
ஏஹி பஸ்சிகோ(Ehi Passiko) சர்வதேச அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும். இது தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:
இன்று (28) நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம் சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கும்.
மாலை 05:30 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவடையும்.
மாலை 04:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறும்.
இதன்போது, ஜனாதிபதியால் வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் உள்ளிட்ட குழுவினரிடம் ஸ்ரீ மகா போதியின் அன்குர கன்று (புனித போதி கன்று) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம், கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமானது. நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமகா விகாரை வரை நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வு காரணமாக இன்று கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்,
முற்பகல் 11:00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரையான வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

