மெகசின் சிறைக் கைதி மரணம்                               – சிறைச்சாலை தலைமை அதிகாரியும் பெண் அதிகாரியும் கைது

மெகசின் சிறைக் கைதி மரணம் – சிறைச்சாலை தலைமை அதிகாரியும் பெண் அதிகாரியும் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மரணம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் நடைபெறுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (27) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மயங்கி விழுந்த நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை 11 மணியளவில் குறித்த இரண்டு நபர்களும் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். இதன்போது சிறைக்காவலர் ஒருவர் அவர்களைத் தடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலின் விளைவாக சந்தேக நபர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரணங்கள்: இவர்களில் ஒரு சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய சந்தேக நபரும், மோதலில் காயமுற்ற சிறை அதிகாரியும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரண்டாவது சந்தேக நபரும் பின்னர் உயிரிழந்துள்ளார்.

எனினும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இந்த மரணங்கள் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிறை அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளதற்கமைய, பொரளை பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து கண்டறிய தீவிர புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )