
ஏஹிபஸ்ஸிகோ அமைதி நடைபயணம் நிறைவு ; வியட்நாம் தேரர் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பரப்பவும், பௌத்த மதத்தின் செய்தியை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் இலங்கையில் ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வியட்நாம் தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் இன்று காலை நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவும், ‘அலோகா’ நாய் உள்ளிட்டோர் இன்று காலை 7.12 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரம் நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேலும் ஒரு இணைப்பு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இன்று அதிகாலை விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையை வந்தடைந்த பிக்குகளுக்கு தானம் வழங்கப்பட்டதுடன், விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆசீர்வாதங்களையும் வழங்கினர். இதன்போது ‘அலோகா’ நாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கால்நடை வைத்தியர்கள், விமான நிலைய பொலிஸார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தினர்.
மேலும், “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தின் நிறைவு விழா நேற்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

