
“கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் எங்களை சேர்ப்பதில்லை” ; காணி உரிமையாளர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக நடைபெறும் கூட்டங்களில் காணி உரிமையாளர்கள் தாங்கள் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்றும், கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூட்ட அறிக்கைகள் கோரப்பட்டபோதும் அவை வழங்கப்படாமல், “அது கூட்டமல்ல, கலந்துரையாடல்” என தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் அண்மையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக கூட அறிக்கை வழங்கப்படாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கும் உரிய முறையில் தங்களை அழைக்கவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் அளவீட்டு பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தபோது, குருந்தூர் மலை விகாராதிபதி விகாரை வளாகத்தில் காணப்பட்டதாகவும், அவரது வருகை தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், கொழும்பிலிருந்து வந்த திணைக்கள அதிகாரிகளின் அடையாளம் தொடர்பாக உறுதி மொழி கோரவில்லை என்றும், தங்கள் மாவட்ட செயலர் அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரின் அலுவலக தலைப்பில் உத்தியோகபூர்வ கடிதம் வழங்குமாறு கேட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு சம்மதம் கிடைக்கவில்லை என்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய கடிதம் அதிகாரப்பூர்வ ஆவணமாக திணைக்கள கோவைகளில் இடம்பெற வேண்டுமெனவும், தொடர்ந்த இலக்கம் கொண்ட சட்டபூர்வ ஆவணமாகவே அது இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதீபன்

