
செம்மணி புதைகுழி அகழ்வு ; 255 மனித என்புக்கூட்டுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாவது நாள் பணிகள் நேற்று (06) முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வின்போது மேலும் ஐந்து என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புக்கூட்டுகளில் இருந்து, ஒரு குழந்தையின் என்புக்கூட்டுத் தொகுதியை உட்பட இரண்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இதுவரை செம்மணி புதைகுழியில் மொத்தம் 255 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 249 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான கருப்பு நிற மண் பகுதிகளில் இருந்து எரிந்த நிலையில் சில என்புகளும், நாணயக் குற்றிகளும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், உடைந்த நிலையில் காணப்பட்ட மூக்குத்தி போன்ற சிறிய தங்க ஆபரணம், சில நாணயக் குற்றிகள், மரப்பெட்டியின் சிதைவுகள் மற்றும் ஆணிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குழந்தையின் என்புக்கூட்டுத் தொகுதியை நேரடியாக மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்க இயலாத சூழ்நிலை காணப்பட்டதால், அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி பாதுகாப்பாக மண்ணுடன் சேர்த்து அகழ்ந்து எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.
பிரதீபன்

