
இலஞ்ச ஆணைக்குழுவில் நாளை ஆஜராகிறார் மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தலின் கீழ் பெறப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்ததாகவும் மனோஜ் கமகே கூறினார்.
அத்தகைய வாக்குமூலத்தின் அடிப்படையில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், அது ஒரு தீவிரமான சட்ட நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மைகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துச் செல்லும் நபர் அல்ல. அதனால் அவர் நாளை ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில சட்டரீதியான விடயங்கள் குறித்து எங்கள் சட்ட வல்லுநர்கள் குழு ஆராய்ந்து வருகிறது,” எனவும் மனோஜ் கமகே மேலும் குறிப்பிட்டார்.

