மதுபான பாதுகாப்பு லேபிள் டெண்டரில் முறைகேடு ?

மதுபான பாதுகாப்பு லேபிள் டெண்டரில் முறைகேடு ?

மதுபான உற்பத்திப் பொருட்களுக்கான பாதுகாப்பு லேபிள்களை அச்சிடும் ஒப்பந்தத்தை சர்வதேச அனுபவமும் தகுதியும் இல்லாத நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

அமைச்சரவை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு லேபிள் அச்சிடும் டெண்டர் நடைமுறைக்கான கொள்முதல் நிபந்தனைகளை கலால் திணைக்களம் தயாரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட தகுதி அற்ற நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தத்தை வழங்கும் வகையில் சில அதிகாரிகள் கொள்முதல் நிபந்தனைகளை வடிவமைக்க முயற்சிப்பதாகவும், நிதி அமைச்சின் சில அதிகாரிகளும் அதற்கு ஆதரவளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தகுதி அற்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டால், முன்னர் இடம்பெற்ற நிலக்கரி கொள்முதல் சர்ச்சையைப் போன்ற நிலைமை மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து, நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த கலால் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற கமடோர் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன, குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

எந்தவொரு நிறுவனத்திற்கும் ஆதரவாக டெண்டர் நிபந்தனைகள் வடிவமைக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், முன்னர் பாதுகாப்பு லேபிள் வழங்கிய நிறுவனம் உள்ளிட்ட அனைத்துக்கும் டெண்டர் செயல்முறையில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்முதல் செயல்முறை தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், கலால் திணைக்களத்திற்கு பாதிப்பு ஏற்படும் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அநியாய நன்மை கிடைக்கும் வகையிலான எந்த நிபந்தனைகளும் சேர்க்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )