
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டும் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை, எதிர்வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவசியமாக பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகன உரிமையாளர்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட கிளைகள் உள்ளிட்ட அலுவலக வளாகங்களில் சுமார் 10 இலட்சம் இலக்கத் தகடுகள் தற்போது தேங்கிக் கிடக்கின்றன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட இந்த இலக்கத் தகடுகள், விண்ணப்பதாரர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாததே இந்த நிலைமைக்குக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தங்களது இலக்கத் தகடுகளை நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மாவட்ட செயலகங்களில் இயங்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளைகளில் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்காக பொதுமக்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இலக்கத் தகடு பிரிவை 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

