
7மாதங்களில் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு
2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில்
52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகல் மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள், போசித்தவர்கள் குறித்து அனைவரும்
நன்கு அறிவார்கள் எனவும் பாதாளக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது எனவும் ,
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே துப்பாக்கிசூட்டு பிரயோகங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அமைச்சர் என தெரிவித்தார்.
இராணுவத்தில் இருந்து இடைவிலகியவர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகியவற்றுக்கு அரசியல் தொடர்பு உள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி,: சர்வஜன சக்தி, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 34 பேர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடான குற்றச்செயல்களுடன் தொடர்புக்கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவர்கள் நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் புதிய சட்டங்கள் வெகுவிரைவில் இயற்றப்பட்டு புதிய விசாரணை அலகுகள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது ,
சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இதனைக் குறிப்பிட்டார்.

