
பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இங்கிலாந்து – நியூசிலாந்து கையில்…
2026 T20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு நிறைவேறுமா அல்லது அந்த அணி தொடரை விட்டு வெளியேறுமா என்பது, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய போட்டியின் முடிவில் தான் உள்ளது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றில் இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்று நடைபெறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானதாகும்.
தற்போதைய நிலையில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், அரையிறுதிக்கும் தகுதி பெற்றுவிட்டது.
நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிடும்.
எனினும் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி இலங்கைக்கு எதிராக மீதமுள்ளது.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
எனவே, நியூசிலாந்து வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி எந்தவித வாய்ப்புமின்றி தொடரை விட்டு வெளியேறிவிடும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும்.
அப்படி நடந்தால் நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடனேயே இருக்கும்.
தொடர்ந்து நாளை (28) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணியும் 3 புள்ளிகளைப் பெறும்.
இரு அணிகளும் 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் தான் அரையிறுதிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்படும்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி +3.050 என்ற மிகச் சிறந்த ரன் ரேட்டை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி -0.461 என்ற மைனஸ் ரன் ரேட்டில் உள்ளது.
எனவே, இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்துவது மட்டும் போதாது மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அதேபோல, இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியும் இமாலய வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் நியூசிலாந்தின் ரன் ரேட்டை முந்தி பாகிஸ்தானால் அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

