
திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கம், சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் வழங்கி அவருடன் உரையாடியிருந்தார்கள்.

இதன்பின்னர் கவனயீர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தாங்கியிருந்த பதாதைகளை அவர்களிடத்தில் சென்று ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன் தனது அன்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

