
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஒன்றிணைந்த கூட்டம்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஒன்றிணைந்த கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த ஒன்றிணைந்த கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் 64,65,66,69 மற்றும் 70 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 84 ஆம் பிரிவின் கீழ் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 மார்ச் 27 ஆம் திகதிய 2429/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு இரு குழுக்களினதும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் தொடர்பில் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் திடீரென மேற்கொள்ளப்படும் இறக்குமதி தொடர்பில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் திடீரென மேற்கொள்ளப்படும் இறக்குமதியினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பாதிப்பு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என்பன தொடர்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் இதன்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் கூட்டுறவுத் துறை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடியதுடன், கூட்டுறவுக் கடன் முறைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டுறவுகளுக்கு கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என இதன்போது குழு சுட்டிக்காட்டியது. எனவே, இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பரிந்துரைத்தார்.
அத்துடன், மாகாண ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து இது தொடர்பில் விசேட குழு அமர்வொன்றை நடத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஒன்றிணைந்த கூட்டத்தில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

