இராணுவ முகாமில் 5 இளைஞர்கள் தாக்கப்பட்டமை முத்தையன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் சடலமாகமீட்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

இராணுவ முகாமில் 5 இளைஞர்கள் தாக்கப்பட்டமை முத்தையன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் சடலமாகமீட்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் , இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட 5 இளைஞர்களை இராணுவத்தினர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைக்காக இராணுவத்தினர் 5 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள 13 SLNG இராணுவ முகாம் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முகாமில் இருந்த உடமைகளை அப்புறப்படுத்தி அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த சில பொருட்களை இராணுவத்தினர் முகாமை சுற்றியுள்ள ஜீவநகர் கிராம இளைஞர்களுக்கு வழங்கி பணம் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைத்த இராணுவத்தினர் அன்றிரவு தமது முகாமுக்கு வருமாறும் இராணுவ முகாமிலிருந்து கழற்றிய தகரம் மற்றும் சில பொருட்களை தருவதாகவும் கூறியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அங்கு சென்ற ஐந்து இளைஞர்களிடம் கட்டில்கள் தகரங்கள் உட்பட சில பொருட்களை இராணுவத்தினர் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது முகாமில் இருந்த சுமார் 20 இராணுவத்தினர் சேர்ந்து பொருட்களை பெறச் சென்ற இளைஞர்களை தடிகள், கம்பிகளால் துரத்தி துரத்தி தாக்கியதாகவும் அங்கிருந்து தப்பிய இளைஞர்கள் மூவர் குளத்தில் குதித்து தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய இரு இளைஞர்களில் ஒருவர் அப்பிரதேச மக்களால் காயங்களுடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .

இராணுவ முகாமிற்கு சென்ற 5 இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இளைஞரின் உறவினர்கள் அவரை இராணுவத்தினர் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை முத்தையன்கட்டு குளத்தில் இருந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட்டார் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உடலத்தை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினரால் இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் விசாரணைகளுக்காக 5 இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சியில் இருந்து விசேடமாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி தலைமையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்திகாரி உள்ளிட்டவர்களைக் கொண்ட விசேட குழுவினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )