
நேபாள பிரதமர் இராஜினாமா
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நேபாளத்தின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி , அந் நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த கடந்த மாதம் நடவடிக்கை எடுத்தார்.
அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் பதிவுக்கு நடவடிக்கை எடுத்து உள்ளன. ஆனால் 26 சமூக ஊடக தளங்கள் இந்த பதிவை செய்யவில்லை. எனவே அந்த சமூக வலைத்தளங்களை கடந்த 4-ந் திகதி நள்ளிரவு முதல் நேபாள அரசு தடை செய்தது.
அதன்படி பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைத்தளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன.
இது வலைத்தளவாசிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
எனவே நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள்,பாடசாலை-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று (07) தலைநகர் காட்மாண்டை நோக்கி பேரணியாக சென்று அங்கே பாராளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் சி’ என்ற பெயரிலான பதாகையை ஏந்திக்கொண்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முயன்ற போது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அத்துடன் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். பொலிஸாரும், போராட்டக்காரர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். நிலைமை கைமீறி போகவே வன்முறையாளர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்ததுள்ளதுடன் பாதுகாப்பு படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பேராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து , சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கி கொண்டது.
ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் மீண்டும் இன்றும் போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர்.
நேபாள உள்துறை மந்திரி மற்றும் பல அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி விலகிய நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலைமையை சமாளிக்க முடியாமல் இருக்கும் பிரதமர் சர்மா ஒலி, நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

