
நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று (30) கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழியவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளை, கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையில், இளைஞனின் சடலம் அதே பகுதியில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

