
கிழக்கு மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள், இன்று (19) காலை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நீடித்து வரும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததற்கெதிராக, இன்று காலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும், அந்த விசாரணை நியாயமாக நடைபெறுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியை தற்காலிகமாக பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சுகாதார அமைச்சு எந்தவித சாதகமான தீர்வையும் வழங்காத காரணத்தினால், இன்று காலை முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

