
கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை நியமிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு கவனம் செலுத்தியது
கொழும்பு துறைமுக நகரில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரை (Authorized person) நியமிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, எம்.கே.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய நிறுவனமொன்று வணிகத்தில் ஈடுபட விரும்பும் போது, குறித்த விண்ணப்பதாரர் கொாழும்பு துறைமுக நகரப் பகுதியில் வணிகத்தில் ஈடுபட அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவராகத் தகுதி பெறவும், அனுமதியைப் பெறுவதற்கும் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்று பதிவுக்காக தற்போது 72 விண்ணப்பங்கள் இருப்பதாக குழு சுட்டிக்காட்டியது.
இதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திடடத்தின் கீழ் நான்காவது மறுஆய்வுக்காக கைச்சாத்திடப்பட்ட விருப்பக் கடிதத்திற்கு அமைய 2025.07.04ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.
எனவே, இந்த விண்ணப்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர். 2025 ஜூலை மாதமாகும் போது 54 விண்ணப்பங்கள் இருந்ததாகவும், அவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது.
குறித்த சட்டம் திருத்தப்படவிருப்பதால் இதுவிடயத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் செயற்பாடு மாறுபடலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இதனால் அவை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்று பதிலளித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், திருத்தச் சட்டமூலம் 2026.01.20ஆம் திகதி நடைமுறைக்கு வருவதால் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பது நாட்டிலுள்ள அனைவரின் குறிக்கோள் என்றும், எனவே விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் (SVAT System) தற்போதைய முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.
சேர் பெறுமதி வரி முறையின் கீழ் மீளப்பெறும் வாய்ப்புக்களுடன் கூடிய கொடுப்பனவுகளை (Refund payments delays) மீளப்பெறும்போது 100% கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் காலதாமதம் இருப்பதாகவும் இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும், இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக அந்தக் காலதாமதங்களை குறைத்து 45 நாட்களுக்குள் அவற்றை விரைவில் மீளப்பெறுதலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
2026 ஜனவரி 15ஆம் திகதி வரையில் பணத்தைத் திரும்பப்பெறும் கொடுப்பனவுகளில் சுமார் 96% செலுத்தப்பட்டுவிட்டதாகவும், பெரும்பாலான பழைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளளப்பட்டிருப்பதாகவும் அதிகரிகள் தெரிவித்தனர்.
குழுவில் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரியின் ஊடாக சிறந்த பலனைப் பெறமுடியும் என்பது தெரியவருவதாகவும், இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் குழு குறிப்பிட்டது.

