
கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சை ; மேலதிக வகுப்புகள் தொடர்பாக வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனுடன், பரீட்சைக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவோ அல்லது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய தடை உத்தரவுகளை மீறி செயல்படும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
பரீட்சை நடவடிக்கைகள் நேர்மையாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதற்காக இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

