
களுத்துறையில் நகராட்சி வேட்பாளர் மீது கொலை முயற்சி ; நால்வர் கைது
களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகராட்சி மன்ற உறுப்பினர் வேட்பாளர் பந்துல பிரசன்ன மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை முயற்சி தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறப்பு அதிரடிப்படை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு மற்றும் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
விசாரணைகளின் அடிப்படையில், நாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் நேற்று (10) பிற்பகல் பலாங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், கடந்த டிசம்பர் மாதம் நாகொட மருத்துவமனையில் சிறைச்சாலை கைதி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும், தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளரைக் கொன்ற சம்பவத்திலும் அவர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நாகொட பகுதியில் ஒருவரைக் கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இரண்டு ஆண் சந்தேக நபர்களும், ஒரு பெண் சந்தேக நபரும் களுத்துறை மற்றும் பலாங்கொட பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 மற்றும் 24 வயதுடையோர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், 23 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் போலோசகமவைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

