
போலி இலக்கத் தகடு, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
காலி மாவட்டத்தின் படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த தோட்டாக்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 9 தோட்டாக்களும், மேலும் சுமார் 01 கிராம் 800 மில்லி கிராம் அளவிலான ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் வதுரவில பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

