இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தது

இரண்டு எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தது

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யா, தல்தியவத்தையில் அமைந்துள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன.

இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரை 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் நாட்டில் எரிவாயு விநியோகம் ஸ்திரப்படுத்தப்பட்டு, தற்போதைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “மார்ச் மாதத்திற்கான தேவையான அளவு 33,000 மெட்ரிக் தொன் என்றாலும், ஒரு தனியார் நிறுவனம் விநியோகத்தை நிறுத்தியதனால் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆர்டர் செய்யப்பட்டது. அந்த அளவு தற்போது கிடைத்துள்ளது” என்றார்.

இவற்றில் சில எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ளவை உள்நாட்டு களஞ்சியசாலைகளிலும் மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியங்களிலும் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மேலும் ஒரு எரிவாயு கப்பல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அது நாளை அல்லது மறுநாள் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

அடுத்த கட்டமாக ஏப்ரல் 21 முதல் 23 வரை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான கப்பல் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி, நாட்டில் எரிவாயு பற்றாக்குறை உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் உறுதியளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )