இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு திசைகாட்டி அரசாங்கத்திடம் எந்த Scenario Planningவும் இல்லை

இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு திசைகாட்டி அரசாங்கத்திடம் எந்த Scenario Planningவும் இல்லை

இன்று போன்ற ஒரு நாளில், நாடு பல பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளும் தருணத்தில், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நெருக்கடியை எதிர்கொள்ளும் விதம் குறித்து நாட்டு மக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். என்றாலும் அவ்வாறு செய்யாமல், நெருக்கடிகளுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது 2025 ஜூன் மாதம் ஆகும். அந்த தாக்குதலையொட்டி விசேட வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு மூலோபாய திட்டங்கள் வகுக்க வேண்டியிருந்தாலும், இந்த அரசாங்கத்திடம் எந்த Scenario Planning வும் காண்பதற்கில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திடம் Scenario Planning இல்லை என்பதற்கு டித்வா சூறாவளியை எதிர்கொண்ட விதமே சான்றாகிறது. இந்தளவு ஆபத்தான நிலையில் நாடு சவாலை எதிர்கொள்ளும் தருணத்தில் பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டுவதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் நாட்டிற்கு சவால்கள் எழும் என்பதால் மாற்றுத் திட்டங்களை வகுத்து மாற்று வழிமுறைகளை கையாளுமாறு நான் சபையில் பிரஸ்தாபித்தேன்.

ஆனால் வெளிவிவகாரஅமைச்சர் அந்த சமயத்தில் இந்த நீரிணை மூடப்படுவதனால் நமது நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.

நமது நாட்டின் எண்ணெய் விநியோகத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று தெரிவித்தார். அன்று சொன்ன அந்த வார்த்தைகளை இன்றும் சொல்கிறீர்களா என்று கேட்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் இங்கு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பெரும் அகங்காரமாக நடந்து கொள்கிறது.

அமெரிக்கா ரஷ்யா மீது விதித்த எண்ணெய் தொடர்பான தடைகளை 30 நாட்களுக்கு விலக்கலளித்தது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது நாட்டிற்கு எண்ணெய் பெறத் தேவையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு அன்று இந்த சபையில் தெரிவித்தேன்.

ஆனால் அந்நாட்களில் இந்த பேச்சுகளை கேட்காமல் ஒரு வாரம் கழித்து ரஷ்ய தூதுவரைச் சந்தித்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி கூறும் நல்ல யோசனைகளை ஏற்றுக்கொள்ளாமல் உண்மையான பேச்சுகளை கேட்காமல் இருப்பதே இந்த அரசாங்கத்தின் அகம்பாவம் ஆகும். அகம்பாவமான அரசாட்சிக்கு ஆயுள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரமற்ற நிலக்கரியை இந்த அரசாங்கமே இறக்குமதி செய்கின்றது. அதைவிடுத்து டொனால்ட் டிரம்போ அல்லது நெதன்யாஹுவோ இல்லை.

இன்றும் நமது நாட்டின் எரிசக்தி மற்றும் மின்சார பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பும் சமயங்களில் இங்கு மாத்திரமில்லை ஏனைய நாடுகளுக்கும் இந்த தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். தரமற்ற நிலக்கரியை இந்த அரசாங்கமே இறக்குமதி செய்கின்றது. அதைவிடுத்து டொனால்ட் டிரம்போ அல்லது நெதன்யாஹுவோ இல்லை.

13 ஆம் திகதி மெகாவோட் 130, 14 ஆம் திகதி 135 மெகாவோட், 15 ஆம் திகதி 132 மெகாவோட் மற்றும் 16 ஆம் திகதி 148 மெகாவோட் என்ற அடிப்படையில் குறைவான மட்டங்களிலேயே மின்சாரம் உற்பத்தியாகிறது.

இந்த குறைவால் டீசல் மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு டீசல் மின்நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது மக்களுக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடாகி மக்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மின்வெட்டு நிகழ்வது மத்திய கிழக்கு போரால் அல்ல.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கையின்படி ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை என்ற 3 மாதங்களில் உச்சகட்ட நேரத்தில் மின்வெட்டு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த காலகட்டத்தில் நுரச்சோலை மின்நிலையத்தின் 1 மற்றும் 2 பிரிவுகள் 25 நாட்களுக்கு பராமரிப்பிற்காக மூடப்படும் என்றும், கெரவலபிட்டிய மற்றும் கெலனிதிஸ்ஸ 2 மின்நிலையங்களும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மின்வெட்டு நிகழ்வது தற்போது நடந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கு போரால் அல்ல, தரமற்ற நிலக்கரியால்தான் இது நடக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தால் சரியாக QR குறியீடு கூட வழங்க முடியவில்லை.

வடக்கில் யுத்தமும் தெற்கில் கிளர்ச்சியும் நடந்த போதும், வளைகுடா போர் நடந்தபோதும் கூட நமது நாடு அதை சரியாக முகாமைத்துவம் செய்து கொண்டது. அன்று எரிபொருள் தட்டுப்பாடு இல்லாதிருந்தது. நலன்புரி திட்டங்களிலும் எந்தவித குறைவும் செய்யப்படவில்லை.

200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டம் கூட இக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அன்று இருந்த ஆட்சி நிர்வாக திறன் இன்று இல்லை. இன்று QR குறியீட்டை கூட சரியாக வழங்க அரசாங்கத்தால் இயலவில்லை.

விற்கப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெற முடியாத நிலை காணப்படுகின்றன. இது குறித்து கேள்வி கேட்க பாராளுமன்றத்தில் அனுமதி இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களுக்காக நாம் எப்போதும் முன்நிற்போம்.

வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு கூட போதுமானதாக இல்லை. நாட்டில் விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு, தொழில் வல்லுநர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறியதுபோல் துறைமுகத்தில் இறக்கும் விலையிலேயே எரிபொருளை மக்களுக்கு வழங்கி எரிபொருளில் உள்ள வரிகளை நீக்க வேண்டும். உண்மையில் இதைத் தான் இந்த அரசாங்கம் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்ததனர்.

இப்போதாவது இந்த ஆணையை மீற வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட சமூக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

நாட்டு மக்களின் பிரச்சினைகள் பேசுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யாதிருக்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம்.

அவ்வாறே, மக்கள் சார்பான தீர்வுகளுக்கு ஆதரவு தருவோம். ஆனால் தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )