
அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதமரின் கவனம்
அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் 2025ஆம் ஆண்டுக்கான ‘மீதமுள்ள விடுமுறைக் கொடுப்பனவுகளை’த் துரிதமாகப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 24ஆம் திகதி இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அங்கு வருகை தந்திருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர்:
“2025ஆம் ஆண்டுக்கான விடுமுறைக் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் விரைவான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஊழியர்களுக்குச் செவிமடுத்து, ஒரு நிறுவனத்தில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவது அந்த நிறுவனத்தின் கட்டாயப் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்குத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

