மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்

இலங்கையின் தற்போதைய ஆற்றல் நிலைமையை முன்னிட்டு, மின்சாரத்தை வினைத்திறனாகவும் திட்டமிட்ட முறையிலும் பயன்படுத்துவது அவசியம் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபை தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார வலியுறுத்தியுள்ளார்.

மாலை 5 மணி முதல் அதிகாலை நேரம் வரை மின்சார உற்பத்திக்காக எரிபொருட்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருட்களை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது அதிக செலவான செயலாக இருப்பதால், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் செலவிற்கும் நன்மை பயக்கும் எனவும் அவர் விளக்கினார். இது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதுடன், எரிபொருள் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

மேலும், பொதுமக்கள் எரிசக்தி வினைத்திறன் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இதற்காக LED மின்குமிழ்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி சாதனங்கள் போன்றவற்றுக்கு எரிசக்தி திறன் அடையாள முத்திரை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் சிறந்த உபகரணங்களைத் தேர்வு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

எரிசக்தி திறன் குறைந்த உபகரணங்கள் நாட்டுக்குள் வருவதைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறுகிய காலத்திலேயே ஆற்றல் திறன் மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் மசகு எண்ணெய் பற்றாக்குறை நிலவுவதால், மின்சார உற்பத்திக்காக டீசல் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உற்பத்திச்செலவு உயர்ந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகல் நேரங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய வேலைகளை பகல் நேரத்துக்கு மாற்றி மேற்கொண்டால், மின்சாரச் செலவையும் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )