அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து அதிகாரிகள் நியமனம்

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து அதிகாரிகள் நியமனம்

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் சிக்கல்களைக் கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைப்பை பேணி தீர்வுகளை வழங்கத் தலையிடுவது இந்த அதிகாரிகளின் பொறுப்பாகும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வாகனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை நிராகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சாலைகள், சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், சுற்றுலாத் துறை சேவை நிறுவனங்கள் அல்லது ஹோட்டல்கள் மற்றும் ஏனைய சேவை வழங்கல் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, அந்த நிறுவனங்களிலிருந்து முன்வைக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும்,

அக்கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக வலுசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

விவசாயம், கடற்றொழில் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்காக, விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அந்தந்த துறைகளுக்குரிய அரச அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய வழங்கப்படும் கடிதத்திற்கு எரிபொருள் வழங்குவதற்குப் பதிலாக, QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், பொருட்களின் விலை அதிகளவில் உயர்வதைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் முறையான முகாமைத்துவத்துடன் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு வலியுறுத்தினார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )