
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளோம் ; பாகிஸ்தான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலாக ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்க படைத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி இந்நிலையில் ஈரானின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் மத்தியஸ்தமாக செயல்படத் தயாராக உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல் தொடர்பாளர் தாஹிர் அண்ட்ராபி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மத்திய கிழக்கில் நீடித்த மோதலுக்கு விரிவான மற்றும் நிலையான தீர்வு காண, வரும் நாட்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளது.
மேற்கு ஆசியாவில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க சீனா மற்றும் பாகிஸ்தான் முன்மொழிந்த ஐந்து அம்சத் திட்டத்திற்கு மத்திய கிழக்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது தற்போதைய பகைமைகளுக்கு நிரந்தர தீர்வைக் காண வழிகாட்டும் முயற்சி.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் வழிநடத்தும் என ஈரான் மற்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் பாகிஸ்தான் மிக முக்கியமான உறவைக் கொண்டுள்ளது, அதன்படி அமைதியான தீர்வுக்காக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.”

