பண்டிகை முன்னிட்டு லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகம்

பண்டிகை முன்னிட்டு லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி லாஃப்ஸ் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், எரிவாயு விநியோகம் தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நுகர்வோருக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துமாறு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7,000 மெற்றிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கையிருப்புகளை இன்று முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்ததாவது:

“பண்டிகைக் காலத்தில் வர்த்தகர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதுடன், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், சந்தையில் பொருட்கள் பதுக்கப்படுதல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களை கண்காணிக்க காவல்துறை மற்றும் அதிகார சபையின் புலனாய்வுப் பிரிவினர் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )