சவுதி அரேபியா – ஐக்கிய அரபு அமீரகம்- பஹ்ரைன், கத்தார் – ஜோர்டான் ஆகிய 5 நாடுகளிடம் இழப்பீடு கோரிய
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய ஐந்து அரபு நாடுகள், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டி, அவற்றிடம் ஈரான் இழப்பீடு கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பாதுகாப்புச் சபையின் தலைவர் ஜமால் பாரிஸ் அல்ரோவாய் ஆகியோருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில், ஐநாவுக்கான ஈரானிய தூதர் அமீர் சயீத் இரவானி இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம், அந்த நாடுகள் தங்களின் “சர்வதேச கடமைகளை மீறியுள்ளன” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அந்த நாடுகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், போரின் போது ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களினால் ஈரானுக்கு 270 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்ததது .
தற்போது மதிப்பிடப்பட்டுள்ள சேத விபரம் 270 பில்லியன் டொலர்கள் என்ற போதிலும், இது இன்னும் இறுதி செய்யப்பட்டத் தொகை அல்ல என்று ஈரான் அரசின் ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜரானி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஈரான் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, இந்தப் போர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வது ஒரு பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்தன.
இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல், ஈராக், ஜோர்டான் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
கடந்த வாரம் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
சமீபத்தில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஈரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையே 21 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிறைவடைந்தன. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

