
ஈரான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் தொலைபேசி உரையாடல்
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நேர்மையான மற்றும் நேரடி முயற்சிகளுக்கு பாகிஸ்தான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத் செல்வதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்திய பின்னரே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது சுற்று அமெரிக்க – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தன.
வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஏற்படுத்தப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதல்கள் இந்த போர்நிறுத்தத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சிநேகபூர்வ உரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
முதலாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவை அனுப்பியமைக்காக பாகிஸ்தான் பிரதமர் ஈரானுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், சவுதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் தாம் அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்தும் பிரதமர் ஷெரீப் ஈரான் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
அமைதி முயற்சிகளில் பாகிஸ்தான் காட்டும் அர்ப்பணிப்புக்காக ஈரான் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

