
கொலைசெய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் சடலம் மீட்பு
சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் வீட்டிற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிரிழந்தவரின் சடலம், மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் நேற்று வெளியே எடுக்கப்பட்டது.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சங்கா எனப்படும் இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் நண்பர் எனச் சொல்லப்படும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலத்தை மரண பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு மாத்தறை பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இது ஒரு கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

