
”ஈரான் மீதான போருக்கு இஸ்ரேல் என்னைத் தூண்டவில்லை””ஈரானின் புதிய தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டால், மிகவும் செழிப்பான எதிர்காலம் அமையும் ” – ட்ரம்ப்
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேல் தன்னைத் தூண்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
தனது Truth Social பக்கத்தில் இது தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தியதாக வெளியான ஊடக அறிக்கைகள் மற்றும் வலதுசாரி அரசியல் விமர்சகர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ட்ரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
“இந்த போலிச் செய்திகளையும் கருத்துக்கணிப்புகளையும் நான் மிகுந்த அருவருப்புடன் பார்க்கிறேன். அவர்கள் கூறுவதில் 90 வீதமானவை பொய் மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகள். 2020 ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்தக் கருத்துக்கணிப்புகளும் ஊழல் நிறைந்தவை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை பெற்றுக்கொள்ள இடமளிக்கக் கூடாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் அரசியல் நிலைமை குறித்து ஊடகங்கள் பேச விரும்பாவிட்டாலும், ஈரானிலும் அத்தகையதொரு வியக்கத்தக்க முடிவு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அந்நாட்டின் புதிய தலைவர்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டால், ஈரானுக்கு மிகவும் செழிப்பான மற்றும் சிறந்த எதிர்காலம் அமையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

