
அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்
டிரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜான் பெலன் (John Phelan) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம், இந்த ராஜினாமா “உடனடியாக நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெலனின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவ் (Hung Cao) தற்காலிகச் செயலாளராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் பெலன் 2024 இல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டு, 2025 மார்ச் மாதம் பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களில் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய உயர்மட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக பெலன் இணைந்துள்ளார்.
இவரது வெளியேற்றத்திற்கான குறிப்பிட்ட காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அண்மையில் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகச் செயலாளராகப் பொறுப்பேற்கும் ஹங் காவ், 25 ஆண்டு கால அனுபவமிக்க கடற்படை வீரராவார்.
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே நிலவும் கடும் போர் பதற்றமான சூழலிலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்தத் தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடரும் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறுவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என ஈரானின் தலைமைப் பேச்சாளர் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணையில், இரண்டு கப்பல்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

