
காசா பகுதியில் உணவு பற்றாக்குறை தீவிரமாகும் !
காசாவில் கடந்த எட்டு வாரங்களாக நீடிக்கும் உதவி தடையின் காரணமாக, அந்த பகுதியில் அனைத்து உணவுத்தொகைகளின் கையிருப்பும் முற்றிலும் தீர்ந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது.
காசா மக்களுக்கு தங்களின் கடைசி உணவுத்தொகையை வழங்கியதை உலக உணவுத் திட்ட அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
இவை சில நாட்களில் முற்றிலும் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காசாவில் உலக உணவுத் திட்டத்தின் உதவியை 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பி இருக்கின்றனர்.
இந்த உதவி தடைப்பட்டால் அவர்களுக்கு மாற்றுவழி எதுவுமில்லை என அந்த அமைப்பின் பஸ்தீன பிரதிநிதியான அன்டொய்ன் ரெனார்ட், தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளையும் காசாவுக்குள் அனுப்புவதை இஸ்ரேல் முழுமையாகத் தடுத்துள்ளது.
இது, 2024ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட மனிதாபிமான உதவியை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறுவதாக உள்ளது என உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தற்காலிகமாக இடம்பெற்ற இருமாத போர் நிறுத்தக்காலத்தில் சேமிக்கப்பட்டிருந்த உணவுத்தொகைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், சந்தையில் கிடைக்கும் மீதமுள்ள சில உணவுப் பொருட்களின் விலை 1,400 சதவீதம் வரை உயர்ந்துவிட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

