
நான் சொன்னதை கேட்டிருக்கலாம் – என்றார் ரணில்
தனது அறிவுரையை கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் , ஐம்பது முதல் நூறு இடங்களை வென்றிருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார் .
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.
குறிப்பாக கொழும்பில் ஒன்றாக செயற்பட்டுருக்க வேண்டும் எனவும் தான் தேர்தலுக்கு முன்னர் சொன்னது போல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாததால் மக்கள் பிளவுபட்டுள்ளனர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சில பகுதிகளில் முடிவுகள் நன்றாக உள்ளமையையிட்டு திருப்தி அடைய முடியும் எனவும் இதனை ஒரு ஆராம்பமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் .
தான் இம்முறை தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்காது
இளம் தலைவர்களிடம் அதனை ஒப்படைத்தது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார் .
இந்த பரீட்சார்த்த நடவடிக்கையில் நல்ல விஷயங்களும் உள்ளன, தோல்விகளும் உள்ளன.
தற்போது இருக்கும் பலத்தைக் கொண்டு எப்படி முன்னேறுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் .
யானை சின்ன வேட்பாளர் என பரிந்துரைக்கப்படும்போது மக்கள் வாக்களிக்க வருவார்கள் என்று சிலர் கூறினர்.
யானை சின்ன வேட்பாளர் என்பதால் மட்டும் மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பது இப்போது தெரிகிறது எனவும் இப்போது கட்சிக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர் , இதற்குப் பிறகு, இளைய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

