
கானாவில் 45 பேருக்கு குரங்கம்மை தொற்று
கானா நாட்டில் 2022-ம் ஆண்டு குரங்கம்மை பாதிப்பு பரவல் தொடங்கியிருந்தது. அதன்பின்னர் தீவிர நடவடிக்கையால் அதன் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதத்தில் 45 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து சுகாதார சேவை அமைப்பு, மண்டல ரீதியிலான அவசரகால குழுக்களை அனுப்பி வைத்ததுடன், கண்காணிப்பு, தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என உறுதியானவுடன், அவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. ஆய்வக பரிசோதனை முடிவின் அடிப்படையில் இந்த தொற்று உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது என சுகாதார சேவை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் சாமுவேல் கபா கூறியுள்ளார்.
தொற்று பாதித்தவர்களிடம் தொடர்பு கொள்ளாமல் தவிர்க்கும்படியும், அவர்களுடன் நெருங்கி பழகாமலும் இருக்கும்படியும், அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை கோரவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

