பிரதமரின் பொசன் நோன்மதி தின செய்தி

பிரதமரின் பொசன் நோன்மதி தின செய்தி

பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அந்த மகத்தான நிகழ்வின் மகிமையையும், நாட்டில் முதலாவது பிக்கு உபசம்பதாவைப் பெற்ற விழாவின் தொடக்கத்தையும் இன்றைய தினம் குறித்து நிற்கிறது.

“புத்த பெருமானின் போதனைகளால் உலகம் ஒளி பெறட்டும்” என்பதே இந்த ஆண்டு அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும். அதன்படி, உலகின் உன்னத சமய நெறி மூலம் எமது வாழ்வை ஒளியேற்ற மஹிந்த தேரர் பயணித்த தர்மத்தின் பாதை குறித்து நாம் மீண்டும் மீண்டும் சிந்தித்து உண்மையான பௌத்த தத்துவத்தின் மூலம் நமது வாழ்வில் ஒளியையும் அமைதியையும் கொண்டு வருவதற்காக பாடுபடுவது மிகவும் முக்கியமானதாகும்.

பொசன் நோன்மதி தினமானது இந்த நாட்டு மக்களின் சமய, கலாசார, சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளில் தனித்துவமான மறுமலர்ச்சிக்கு வழிவகுத்த ஒரு நாள் என்ற வகையில், சமய ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

பௌத்த சமய வரலாற்றின்படி, இந்த நாட்டில் வன்முறையற்ற ஒரு அகிம்சை சமூகத்தை உருவாக்குவதற்கான முதற் படி பொசன் நோன்மதித் தினத்தை அடிப்படையாகக் கொண்டே எடுத்துவைக்கப்பட்டது. உன்னதமான கலாசார வாழ்க்கையையும் பரிவுணர்வையும்கொண்ட மக்களை உருவாக்கும் உயர்ந்த பொறுப்பை சுமந்துள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில், மஹிந்த தேரர் அவர்கள் கொண்டு வந்த அகிம்சை மற்றும் சகவாழ்வின் செய்தியை மென்மேலும் பிரகாசிக்கச் செய்ய பாடுபடுவோம்.

முழு நாடும் மீண்டும் புதியதோர் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிப் பயணிக்கும் இச்சந்தர்ப்பத்தில், இந்த ஆண்டு பொசன் நோன்மதித் தினம் அந்த புதிய யுகத்திற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும்.

அனைவருக்கும் உன்னத பொசன் பண்டிகை வாழ்த்துக்கள்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )