
அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்திகதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.
இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு.
நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகார தலைவரான அயதுல்லா அலி காமேனி, “இந்த விவகாரத்தில் ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது. ஒருபோதும் ஈரான் சரணடையாது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.


