
நுவரெலியாவில் ஏலம் விடப்படும் போனீக்கள் (ponies)
நுவரெலியாவில் தெருவில் சுற்றித்திரியும் போனீக்களைப் பிடித்து கைப்பற்ற நகராட்சி நடவடிக்கை எடுதுள்ளதாக நுவரெலியா மேயர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.
போனீக்களின் உரிமையாளர்கள் அவற்றை கொண்டு வருமானம் ஈட்டுவதாகவும், எனினும் அந்த போனீக்களை பராமரிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
அவை நகரத்தில் சுற்றித் திரிந்து உணவகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வழங்கும் உணவை உண்கின்றன என குறிப்பிட்ட நுவெரேலியா மேயர் , சில போனீக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கின்றன , உரிமையாளர்கள் அவற்றை குணப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் நுவரெலியா நகரத்திற்கு வரும் வாகனங்களுக்கு இடையூறாக தெருவில் கிடக்கும் போனீக்களால் ஏற்படும் துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த போனீக்கள் நகராட்சியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் உரிமையாளர்களின் அவற்றை தமது பராமரிப்பில் எடுத்துக் கொள்ள , அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் , அவ்வாறு போனீக்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாவிட்டால் , நகராட்சி அவற்றை ஏலம் விடும் என்றும் நுவரெலியா மேயர் உபாலி வணிகசேகர கூறினார்.

