
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட பாலஸ்தீன ‘பாலஸ்தீன நடவடிக்கை’ குழு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 450 க்கும் மேற்பட்டோர் கைது
பிரிட்டன் அரசு , (Palestine Action) எனப்படும் “பாலஸ்தீன நடவடிக்கை” குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்துள்ள நிலையில் இந்தத் தடையை எதிர்த்து, நாடு முழுவதும் குழுவிற்கு ஆதரவு தெரிவித்து பல நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 450 ற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
பிரிட்டனில் செயற்படும் இந்த குழுவிற்கு ஆதரவு தெரிவித்து லண்டன், மான்செஸ்டர், பிரிஸ்டல், ட்ரூரோ உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் மட்டும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பதாகைகள் வைத்திருந்ததற்காக 55 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஏனைய பகுதிகளில் நடந்த போராட்டங்களின் போது 450ற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாக செய்யப்பட்டதாக வெளிநாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் லண்டன் போலீசார் மேற்கொண்ட அதிக எண்ணிக்கையிலான கைது நடவடிக்கை இது என அந்நாட்டு போலீசார் தெரிவிக்கின்றனர் .
இந்தக் கைதுகள் பிரிட்டனில் கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்ட உரிமைகள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கை விலங்கு பூட்ட அமைதியான முறையில் போலீசாருக்கு ஒத்துழைத்தனர்.
சிலர் பொலிஸார் தம்மை கைது செய்வதை எதிர்த்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போலீசார் கைது செய்ய வரும் போது ‘பாலஸ்தீன நடவடிக்கை’ குழுவை ஆதரிக்கிறேன் என எழுதிக் கொண்டிருப்பது காணொலியில் பதிவாகியுள்ளது.
‘பாலஸ்தீன நடவடிக்கை’ குழுவிக்கெதிரான தடைக்கு சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளவும் குழு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் இந்த நடவடிக்கை பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல் என பலர் விமர்சித்தனர்.
பாலஸ்தீன நடவடிக்கைக் குழுவை ஆதரிப்பவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பிரிட்டனின் 2000-ஆம் ஆண்டு பயங்கரவாதச் சட்டம் கூறுகிறது.
ஜூலை மாத தொடக்கத்தில், பிரிட்டனின் ஒரு பெரிய விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்த இந்த குழுவின் உறுப்பினர்கள், இரண்டு விமானங்களின் மீது வண்ணப்பூச்சு தெளித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புகள், இந்தத் தடை “அசாதாரணமானது” எனவும் மனித உரிமைகளை மீறும் செயல் எனவும் விமர்சித்துள்ளன.

