இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் தெரிவு

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்பெற்றது. சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

May be an image of 9 people, people studying and text

பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக இதன்போது தெரிவுசெய்யப்பட்டார். 

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டியதுடன், இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் சவூதி அரேபியா ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருவதாகத் தெரிவித்தார். நீர், வலுசக்தி, சுகாதாரம், நீதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவுதி அரேபிய நிதியத்தின் ஊடாக சவூதி அரேபியா மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் பாராட்டியதுடன், அவை இலங்கை மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் அண்மையில் மேற்கொண்ட ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

May be an image of 4 people and text

இதன்போது கருத்துத் தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்கஹ்தானி, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர மரியாதை மற்றும் வினைத்திறனான ஒத்துழைப்பின் அடிப்படையிலான சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல தசாப்த கால உறவுகளை சுட்டிக்காட்டினார். அண்மைய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், பாராளுமன்றங்களுக்கிடையிலான உயர்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான பாலமாக நட்புறவுச்சங்கம் செயல்படும் என்பதை வலியுறுத்தினார்.

கல்வி, வர்த்தகம், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக நட்புறவுச்சங்கத்தின் புதிய தலைவர் அமைச்சர் குமார ஜயகொடி இதன்போது உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல், மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் சட்டவாக்க உரையாடலை வளர்ப்பதற்கான ஒரு தளமாக நட்புறவுச் சங்கத்தின் பங்கை அவர் சுட்டிக்காட்டினார். 

நன்றியுரை நிகழ்த்திய நட்புறவுச்சங்கத்தின் புதிய செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை வளர்ப்பதில் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கும் அதன் சர்வதேச பங்காளர்களுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் நட்பை மேம்படுத்துவதில் சபாநாயகர் வழங்கும் தலைமைத்துவத்திற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கான தனது விஜயத்தின்போது, சவூதி அரேபிய தூதுவர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், இதன்போது ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான ஆதரவை சவூதி அரேபிய தூதுவர் இதன்போது உறுதிப்படுத்தினார். 

May be an image of 2 people, dais and text

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ஆகியோரையும் சவூதி அரேபிய தூதுவர் இதன்போது சந்தித்தார். இச்சந்திப்புக்களில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )