
நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 79வது பிரிவுக்கு அமைய நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் அண்மையில் (15) சான்றுரைப்படுத்தினார்.
இந்த நாணய மாற்றுண்டியர்கள் (திருத்த) சட்டமூலம் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு அமைய நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நாணய மாற்றுண்டியல்கள் (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருவதுடன், இதன்மூலம் 82வது அத்தியாயமான நாணய மாற்றுண்டியல்கள் (கட்டளைச்) சட்டத்தை நவீனமயப்படுத்தி, சமகால வங்கி நடைமுறைகளுக்கு ஏற்றவாறாக மாற்றுவது பிரதான நோக்கமாகும்.
இந்தச் சட்டத்தின் மூலம் மோசடியான மற்றும் பிழையான காசோலைகளை வழங்குபவர்கள் தொடர்பில் குற்றவியல் பொறுப்பைச் சுமத்த முடியும். அத்துடன், அன்றாட வணிக நடவடிக்கைகளின் போது சட்டத்திற்கு அமைய நாணய மாற்றுச்சீட்டுக்களைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதுடன், காசோலைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்கின்றது.
இந்தத் திருத்தத்தின் பிரதான அம்சங்களில் தற்போதைய காலத்திற்குப் பொருந்தக்கூடிய வகையில் சட்டப்படியான வீதத்திற்கிணங்க ஓர் உண்டியலின் மீதான வட்டியைக் கணக்கிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், தொலைநகல் கடத்துகை அல்லது வேறு இலத்திரனியல் வழிவகைகள் மூலம் மதிப்பளிக்காமை பற்றிய அறிவித்தலைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன், காலங்கடந்த செயல்முறைகளை நீக்குவதும் தற்போதைய வரைதல் செயல்முறைகளுக்கு இணங்கவாகச் செய்தல் என்பனவும் அடங்குகின்றன.
கொடுப்பனவுக்கான காசோலையொன்றின் உருவத்தைத் தொலைநகல் கடத்துகை அல்லது வேறு வழிவகைகள்மூலம் பணஞ்செலுத்தும் வங்கிக்கு வங்கியாளர் கடத்துவதனை இயலச்செய்தல், ஒரு காசோலையின் இருபக்கங்களிலும் ஒரு காசோலைக்குக் குறுக்குக் கோடிடும் செயல்முறையை நியதிச்சட்டமுறையாக ஏற்றங்கீகரித்தல், “மட்டும்” என்ற சொல்லுடனோ அல்லது அதுவின்றியோ “கணக்குவைத்திருப்பவருக்கு” என்ற குறுக்குக்கோடிடுதலுக்கு நியதிச்சட்டமுறையான ஏற்றங்கீகாரம் வழங்குதல், வங்கியாளர்களுக்குப் பணஞ்செலுத்துவதற்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் குறித்தசில காசோலைகளுக்கு மதிப்பளிக்காமை தொடர்பில் தண்டங்களுக்கும் வேறு விளைவாந்தன்மையினவான கருமங்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்தல் என்பனவும் இத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளன.

