
சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் தொழிற்சங்கத்தினர் !
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை தொடங்கிய சத்தியாக்கிரகம் காரணமாக மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தைச் சுற்றி சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
பார்சல்களை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில குழுக்கள் இடையூறு விளைவித்ததால், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திற்கு போலீசார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .
19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கங்கள் 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று 5 வது நாளாகவும் தொடர்கிறது, மேலும் அஞ்சல் சேவைகளைப் பெற வந்த மக்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு மற்ற தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, அகில இலங்கை உப தபால் அதிபர்கள் சங்கத்தின் பொருளாளர் ரவீந்திர அமரஜீவ, தெரிவித்தார்.
இன்று பணிக்கு வராத அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியவர்ளாக கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவான் சத்குமார ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
மேலும், 17 ஆம் திகதி முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதால், முறையான விடுப்பு ஒப்புதல் இன்றி பணிக்கு வராத தபால் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் மாதாந்த சம்பளத்தை பெற விரும்பினால் உடனடியாக பணிக்கு வருமாறு தபால் மா அதிபர் ருவான் சத்குமார கேட்டுக்கொள்கிறார்.

