முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட மகசின் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலை பார்வையிட மகசின் சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு புதிய மகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவரை காண்பதற்காக நேற்று இரவு பல அரசியல்வாதிகள் அங்கு சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் குழுவினர் அங்கு சென்றபோதும் அவர்கள்,உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வைத்திய ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேக நபர் ரணில் விக்ரமசிங்கே சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இலங்கை வரலாற்றில் ஒரு நிறைவேற்று ஜனாதிபதி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார் .

ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நியூயார்க் சென்று அங்கிருந்து , அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனது மனைவியான , பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்டமை குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஜூன் 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.

இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )