
வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டுக்கான விசாரணை திகதி அறிவிப்பு
2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் புங்குடுத் தீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்தி, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் எனக் கருதி விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் ஊடாக பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

